ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் உத்வேகமளித்தது - சூர்யகுமார் யாதவ்!
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. அதைத்தொடர்ந்து அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற 5 போட்டிகள் டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இத்தொடரிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாமல் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் களமிறங்குகிறது. இருப்பினும் தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினம் என்பதால் மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் அணியால் சாதிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்நிலையில் 2023 உலகக்கோப்பை தோல்வி மிகப்பெரய ஏமாற்றத்தை கொடுத்ததாக சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். இருப்பினும் அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் 4 – 1 என்ற கணக்கில் பதிவு செய்த வெற்றி தங்களுக்கு மிகப்பெரிய பூஸ்ட் கொடுத்துள்ளதாக தெரிவிக்கும் அவர் அதே போலவே இத்தொடரிலும் பயமின்றி விளையாடி வெற்றி பெற போராட வேண்டுமென இந்திய வீரர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “உலகக் கோப்பை தோல்வி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதிலிருந்து நாங்கள் நகர்வது கடினமாக இருந்தது. ஆனால் அதைத்தொடர்ந்து டி20 தொடராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பதிவு செய்த வெற்றி பெரிய பூஸ்ட் கொடுத்தது. அத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து வீரர்களும் ஒன்றாக கைகோர்த்து பயமற்ற கிரிக்கெட்டை விளையாடினார்கள். அதே ஆட்டத்தை தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் விளையாட வேண்டும்.
ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுவீர்களோ அதே போல் இத்தொடரிலும் விளையாடுங்கள் என்று எங்களின் இளம் வீரர்களிடம் கூறியுள்ளேன். இன்றைய கடைசி பயிற்சியை நிறைவு செய்த பின் நாளை யார் ஓப்பனிங்கில் விளையாடுவார், 6ஆவது பவுலராக யார் செயல்படுவார் என்பது போன்ற முடிவுகளை எடுக்க உள்ளோம். கேப்டனாக செயல்படுவதை தற்போது நான் மகிழ்ச்சியாக செய்கிறேன். அவை அனைத்தும் உங்களுடைய வீரர்களை எப்படி ஒருங்கிணைத்து விளையாடுகிறீர்கள் என்பதை பொறுத்தது” என்று கூறியுள்ளார்.