இருவருமே அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர் - சஞ்சு, திலக்கை பாராட்டிய சூர்யா!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி ஜோஹன்னஸ்பர்கில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். இதனால் அந்த 10 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. பின்னர் இணைந்த டிரிஸ்டன் ஸ்டபஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து 5ஆவது விக்கெட்டுக்கு 86 ரன்களை சேர்த்தனர். பின் மில்லர் 36 ரன்னும், ஸ்டப்ஸ் 45 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் மார்கோ ஜான்சன் 29 ரன்களைச் சேர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு நடையை கட்டியதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி இப்போட்டியில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது. மேலும் சதமடித்து அசத்திய திலக் வர்மா, தொடர் மற்றும் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இங்குள்ள நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எந்த ரகசியமும் எங்களிடம் இல்லை. நாங்கள் டர்பனில் வந்து இறங்கியதுடன் எங்கள் திட்டங்கள் மிகவும் தெளிவாக இருந்தன. கடந்த முறை நாங்கள் இங்கு வந்தபோது, எப்போது விளையாடினோமே அதே பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டை விளையாட விரும்பினோம்.
இத்தொடரில் நாங்கள் 2-1 என முன்னிலை பெற்றிருந்தாலும், இன்றைய போட்டியிலும் நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என முயற்சித்தோம். அதனால் நாங்கள் முடிவைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் எல்லாம் எங்களுக்கு சாதகமாக நடந்தது. இன்று சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோரில் யார் சிரப்பாக செயல்பட்டனர் என்பதை தேர்ந்தெடுப்பது மிகவும் கடின. ஏனெனில் இருவருமே இப்போட்டியில் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
கடந்த ஆண்டு நாங்கள் சுற்றுப்பயணம் செய்தபோது, இரவு நேரத்தில் விளக்குகளுக்கு கீழ் விளையாடும் போது இந்த விக்கெட்டில் ஏதோ இருப்பதாக எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதைப் பின்தொடர்ந்தோம். அதனால் தொடர்ந்து ஒரே திட்டத்துடன் செயல்பட்டதன் காரணமாக, இப்போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்தது. ஐசிசி தொடர்களில் நீங்கள் வெற்றிபெற்றாலும், அதற்கு இதுபோன்ற தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது பெரிய ஊக்கத்தை அளிக்கிறது.
Also Read: Funding To Save Test Cricket
நாங்கள் இங்கு தொடரை வென்றதும் எங்கள் மனதில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாகக் கூறுவது கடினம். ஏனெனில் நாங்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது, இங்கு வந்து வெற்றி பெறுவது மிகவும் சவாலானது என்பது தெரியும். அதனால் இது ஒரு சிறப்பான வெற்றி, என்றென்றும் என்னுடன் இருக்கும். மேலும் இத்தொடரில் அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவி ஊழியர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கினர்” என்று தெரிவித்துள்ளார்.