பிபிஎல் 2022: அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியில் ஹாபர்ட் ஹரிகேன்ஸை வீழ்த்தி சிட்னி தண்டர் அபார வெற்றி!

Updated: Sat, Dec 31 2022 13:24 IST
Image Source: Google

பிக்பேஷ் டி20 லீக் தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்  செய்த சிட்னி தண்டர்  அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்க்ஸ் அதிரடியாக விளையாடிய 16 பந்தில் 33 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து வந்த ரைலீ ரூசோ 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் 74 ரன்களுக்கு சிட்னி தண்டர் அணி 2 விக்கெட்டை இழந்தது. 

அதன்பின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் ஒலிவர் டேவிஸும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் 3ஆவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 105 ரன்களை குவித்தனர். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஆலிவர் டேவிஸ் 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். 

மறுமுனையில் அலெக்ஸ் ஹேல்ஸ் 45 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் சிட்னி தண்டர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை குவித்தது. ஹாபர்ட் அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 229 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியில் டி ஆர்சி ஷார்ட் 2 ரன்களிலும், ஜெவெல் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய மேத்யூ வேட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், 30 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரிகள் என 67 ரன்களைச் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்மி நீஷம், டிம் டேவிட், ஆசிஃப் அலி, சதாப் கான் போன்ற நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்ப, 17 ஓவர்களில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்தது. சிட்னி தண்டர் தரப்பில் பிரெண்டன் டக்கெட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஒலிவியர் டேவிஸ் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை