கிரிக்கெட் அகாடமியை திறக்கும் நடராஜான்; திறப்பு விழாவிற்கு வரும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்!

Updated: Sat, Jun 10 2023 20:43 IST
Image Source: Google

தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் நடராஜன் அடிமட்டத்திலிருந்து கடுமையாக உழைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடி சாதனை படைத்தவராக போற்றப்படுகிறார். கடந்த  2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பவுலராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

அந்த தொடரில் பும்ரா காயமடைந்ததால் முதலில் டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்று 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர் அதன் காரணமாக அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு பெற்று 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைவிட அடுத்ததாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் காபா போட்டியில் அறிமுகமாகி 3 விக்கெட்டுகளை எடுத்து மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினார்.

அதன் பின் காயமடைந்ததால் மீண்டும் இடம் கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன்கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தம்முடைய சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் அகடமியை உருவாக்கினார். சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த அகாடமி வேலைகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

குறிப்பாக 4 பிட்ச்கள், உடற்பயிற்சி கூடம், மினி கேலரி, கேன்டீன் மட்டுமல்லாமல் 100 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு தேவையான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட அந்த அகாடமி தற்போது முழுமையாக கட்டுமான வேலைகள் முடிந்து தயாராகியுள்ளது. சேலத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருக்கும் கிரிக்கெட்டின் மீதான ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அகாடமியில் பயிற்சிகளை எடுத்து வருவதாக நடராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதை விட அவர்களிடம் எவ்விதமான கட்டணமும் வசூலிக்காமல் பேட், க்ளவுஸ் போன்ற உபகரணங்களை அகடமி சார்பில் கொடுத்து பயிற்சிகளை எடுப்பதற்கு வழிவகை செய்யப்படுவதாகவும் நடராஜன் கூறியிருந்தார். அத்துடன் விஜய் சங்கர், அபாரஜித் சகோதரர்கள் போன்ற தமிழகத்துக்காக விளையாடும் வீரர்களும் தம்முடைய அகடமியின் வளர்ச்சிக்காக உதவி செய்துள்ளதாக தெரிவித்த அவர் தற்போது அதற்கான திறப்பு விழா தேதியை அறிவித்து அழைப்பிதழ் வெளியிட்டுள்ளார்.

 

அதன் படி நடராஜன் கிரிக்கெட் மைதானம் என பெயரிடப்பட்டுள்ள அந்த அகடமி வரும் ஜூன் 23ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும் நட்சத்திர தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த அகடமியை தலைமை விருந்தினராக வந்து திறந்து வைக்க உள்ளதாக நடராஜன் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ பழனி, முன்னாள் செயலாளர் ராமசாமி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன், பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோருடன் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை