T20 WC 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் முகமது ரிச்வான், உஸ்மான் கான், ஃபகர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் இணைந்த கேப்டன் பாபர் ஆசாம் - ஷதாப் கான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷதாப் கான் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கும், கேப்டன் பாபர் ஆசாம் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
இறுதியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நோஸ்துஷ் கென்ஜிகே 3 விக்கெட்டுகளையும், சௌரவ் நேத்ரவால்கர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி அமெரிக்க அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 44 ரன்களைச் சேர்த்துள்ள நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக விராட் கோலி 4038 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் நீடித்து வந்தார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் இன்றைய போட்டியில் 44 ரன்களைச் சேர்த்துடன், 4067 ரன்களைச் சேர்த்து முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியளில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 4026 ரன்களுடன் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.