ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ஃபார்மை காட்டிய பாண்டியா - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ள காரணத்தனால் இத்தொடரின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியானது நடப்பு சீசனிலாவது கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியானது தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மஹ்முதுல்லா - ஷாகில் அல் ஹசன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 40 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஹர்ஷ்தீப் சிங், ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி துணைக்கேப்டன் ஹர்திக் பாண்டியா, தன்விஸ் இஸ்லாம் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அசத்தினார். முன்னதாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிதளவில் சோபிக்காமல் சொதப்பினார்.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் அவரது ஃபார்ம் குறித்த கேள்விகள் அதிகளவில் இருந்தன. இந்நிலையில் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் பேட்டிங்கில் 40 ரன்களைச் சேர்த்ததுடன், பந்துவீச்சிலும் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.