T20 WC 2024: கடைசி ஓவரில் கலக்கிய மகாராஜ்; வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!

Updated: Mon, Jun 10 2024 23:40 IST
T20 WC 2024: கடைசி ஓவரில் கலக்கிய மகாராஜ்; வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வங்கதேச அணியை பந்துவீச அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் - ரிஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் டிக் காக் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி அதிரடி காட்டிய நிலையில், மற்றொரு தொடக்க வீரரான ரீஸா ஹென்றிக்ஸ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பாக தொடங்கிய் டி காக்கும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 18 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 23 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த் ஹென்ரிக் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டேவிட் மில்லரும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தன்ஸிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர்.

இப்போட்டியில் தன்ஸித் ஹசன் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 9 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 14 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் வங்கதேச அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த தாவ்ஹித் ஹிரிடோய் மற்றும் மஹ்முதுல்லா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். 

இருவரும் இணைந்து பொறுப்பாக விளையாடியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த தாவ்ஹித் ஹிரிடோய் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 18 ரன்களை தேவை என்றநிலை ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் 19ஆவது ஓவரை வீசிய ஓட்னீல் பார்ட்மேன் 7 ரன்களைக் கொடுக்க, கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கடைசி ஓவரை கேசவ் மகாராஜ் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஜக்கார் அலி 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர மஹ்முதுல்ல சிக்ஸர் அடிக்க முயற்சித்த நிலையில் கேப்டன் ஐடன் மார்க்ரமின் அபாரமான கேட்ச்சின் மூலம் 20 ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் காரணமாக வங்கதேச அணி வெற்றிபெற கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த பந்தை எதிர்கொண்ட தஸ்கின் அஹ்மதால் பந்தை பவுண்டரி அடிக்க முடியவில்லை. 

இதன் காரணமாக வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாகவும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை