எங்களிடம் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் - ஆண்ட்ரிச் நோர்ட்ஜே எச்சரிக்கை!

Updated: Sat, Oct 29 2022 22:01 IST
Image Source: Google

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளும் தங்களது 3ஆவது போட்டியில் நாளை பெர்த்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும். அதிலும் பெர்த் ஆடுகளம் உலகின் அதிவேக வேகப்பந்து ஆடுகளம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.

இந்நிலையில், நாங்கள் உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி என தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்ஜே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய நோர்ட்ஜே, “நாங்கள் எங்களை நம்புகிறோம். உலக கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணிகளில் நாங்களும் ஒன்று. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் எங்களுடைய முழு திறமை மீது நம்பிக்கை வைத்து செல்வோம். நாங்கள் விதவிதமான வகையில் பந்து வீசும் வீரர்களைக் கொண்டுள்ளோம். நாங்கள் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அணி. எங்களுடைய வேகப்பந்து வீச்சின் மூலம் பல்வேறு இடங்களை சரிசெய்வோம்.

வேகப்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் நாங்கள் எங்களுடைய திறமையைின் மீது நம்பிக்கை வைத்து செல்வோம். எந்த அணிக்கு எதிராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் நாளில் நாங்கள் எங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, வெற்றிபெற முயற்சிப்போம். அத்துடன் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் பெற்றுள்ளோம். நாளைய போட்டியை எங்கள் வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதன்மீது கவனம் செலுத்துவோம்.

பெர்த் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளை வைத்து பார்க்கும்போது, சிறந்த ஆடுகளமாக தெரிகிறது. அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் உள்ளது. நாளைய போட்டிக்கான ஆடுகளம் எப்படி இருக்கும் என்பதை குறித்து உறுதியாக கூற இயலாது. சற்று மாறுபட்டு காணப்படலாம்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை