ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஓமன் - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக தொடக்க வீரர்கள் இருவரும் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் அசாத் வாலா - சார்லஸ் அமினி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது. இதில் அசாத் வாலா அரைசதம் கடந்தார்.
அதன்பின் 56 ரன்களில் அசாத் வாலா ஆட்டமிழக்க, 37 ரன்னில் சார்லஸும் விக்கெட்டை இழந்தார். அடுத்த வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களைச் சேர்த்தது. ஓமன் அணி தரப்பில் கேப்டன் ஸிஷான் மஹ்சூத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.