டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய பாகிஸ்தான்!

Updated: Sun, Oct 24 2021 23:12 IST
Image Source: Google

டி20 உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முதல் ஓவரிலேயே ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தில் டக் அவுட்டானார். ஷாஹீன் அஃப்ரிடியின் அடுத்த ஓவரில் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமாரும் 11 ரன்னில் வெளியேறினார். 

31 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணிக்கு, கோலியும் ரிஷப் பண்ட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்து கொடுத்தனர். களத்திற்கு வந்தபோது, பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் நிதானம் காத்த ரிஷப் பண்ட், செட்டில் ஆனபின்னர் 2 சிக்ஸர்களை விளாசினார். 30 பந்தில் 39 ரன்கள் அடித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய கேப்டன் கோலி அரைசதம் அடித்தார்.

கடைசி 2 ஓவர்களில் அடித்து ஆடும் முனைப்பில் களத்தில் நின்ற கோலி, 19வது ஓவரில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 13 ரன்களும், ஹர்திக் பாண்டியா 11 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

152 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே இந்திய பவுலர்களை செட்டில் ஆகவிடாமல் அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தினர்.

புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய இருவரின் பவுலிங்கையும் ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடினர். ஆனால் பும்ரா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரின் முதல் ஸ்பெல்லை பெரிதாக அடித்து ஆடவில்லை என்றாலும், அடுத்தடுத்த ஸ்பெல்களை அடித்து நொறுக்கினர் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள்.

அதிரடியாக ஆடிய இருவருமே அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான எந்த வாய்ப்பையுமே இந்திய பவுலர்கள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. எந்தவித அழுத்தமும் இல்லாமல் மிகவும் ரிலாக்ஸாக பேட்டிங் ஆடிய பாபர் அசாமும், ரிஸ்வானும் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தனர்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதனால் 18ஆவது ஓவரில் இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்துள்ளது பாகிஸ்தான் அணி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை