டி20 உலகக்கோப்பை: ரைலி ரூஸோவ் மிரட்டல் சதம்; இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்றில் இன்று க்ரூப் 2இல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன. இன்றைய முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வேட்கையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் வழக்கம் போல கேப்டன் டெம்பா பவுமா 2 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - ரைலீ ரூஸோவ் இணை தொடக்கம் முதலே பவுண்டரி, சிக்சர்களை விளாசி எதிரணி பந்துவீச்சாளர்களை மிரளவைத்தனர்.
இதில் வழக்கத்திற்கு மாறாக குயின்டன் டி காக் நிதானமாக விளையாட, மறுமுனையில் ரூஸோவ் காட்டடியில் மிரட்டினார். தொடர்ந்து இருவரும் அரைசதம் கடந்து அதிரடி காட்ட, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 163 ரன்களைக் கடந்தது. டி20 உலகக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது.
பின் 63 ரன்களில் குயின்டன் டி காக் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் இருந்த ரைலீ ரூஸோவ் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் சதமடித்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் வரலாற்று சாதனையையும் படைத்தார்.
அதன்பின் 56 பந்துகளில் 8 சிக்சர், 7 பவுண்டரிகளை விளாசி 109 ரன்களைச் சேர்த்திருந்த ரைலீ ரூஸோவ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்து வங்கதேசத்திற்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.