டி20 உலகக்கோப்பை: கிளென் பிலீப்ஸ் காட்டடி சதம்; இலங்கைக்கு 168 டார்கெட்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. ஆனால் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இலங்கை அணி தரப்பில் மஹீஷ் தீக்க்ஷனா வீசிய முதல் ஓவரிலேயே நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் ஃபின் ஆலன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரரான டேவன் கான்வேவும் ஒரு ரன்னில் தனஞ்செயாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் இப்போட்டியிலாவது ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி பவர்பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் - டெரில் மிட்செல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்தனர். இதில் மிட்செல் நிதானமாக விளையாட, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய கிளென் பிலீப்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதையடுத்து 24 பந்துகளில் 22 ரன்களை எடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெரில் மிட்செல் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, மறுமுனையில் கிளென் பிலீப்ஸ் பவுண்டரியும் சிக்சர்களுமாக பறக்கவிட்டு அசத்தினார். இதற்கிடையில் ஜேம்ஸ் நீஷம் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த கிளென் பிலீப்ஸ் 61 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் 64 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் சேர்த்திருந்த கிளென் பிலீப்ஸ் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.