டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - ஆஃப்கானிதான் போட்டி மழையால் ரத்து!
டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சூப்பர் 12 போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகின்றன.
அதன்படி மெல்போர்னில் இன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
ஆனால் காலை முதல் பெய்த மழை காரணமாக இப்போட்டியில் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதே மைதானத்தில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 14.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 105 ரன்களை எடுத்திருந்தது.
அதன்பின் மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் காரணமாக இப்போட்டியில் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.