டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ஃபெர்னாண்டோ சேர்ப்பு!

Updated: Mon, Oct 17 2022 11:30 IST
Image Source: Google

அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய பெரிய அணிகளையெல்லாம் வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது இலங்கை அணி. ஆசிய சாம்பியனான இலங்கை அணி மீது டி20 உலக கோப்பையில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் பெரிய அணியான இலங்கை, டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறாமல் தகுதிப்போட்டியில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது. ஆனால் நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்வதால் எளிதாக இந்த 3 அணிகளையும் இலங்கை வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியிலேயே நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி 20 ஓவரில் 163 ரன்களை குவித்தது. இலங்கை அணியின் 3 ஃபாஸ்ட் பவுலர்களான துஷ்மந்தா சமீரா 39, பிரமோத் மதுஷன் 37 மற்றும் சாமிகா கருணரத்னே 36 ஆகிய மூவருமே அதிக ரன்களை வாரி வழங்கினர். டெத் ஓவர்களில் அதிக ரன்களை வழங்கினர்.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆசிய சாம்பியன் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்பினர். கேப்டன் தசுன் ஷனாகா அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார். நிசாங்கா 9, குசால் மெண்டிஸ் 6, தனஞ்செயா டி சில்வா 12, குணதிலகா 0, பானுகா ராஜபக்சா 20 என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து  ஏமாற்றமளிக்க, இலங்கை அணி 19 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இலங்கை.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோ உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பினுரா ஃபெர்னாண்டோ, இந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை