டி20 உலகக்கோப்பை: கான்வே அதிரடி; ஆஸிக்கு 201 டார்கெட்!
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ஃபின் ஆலன் 16 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசினார்.
கேப்டன் கேன் வில்லியம்சன் 23 பந்தில் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டெவான் கான்வே அதன்பின்னர் அடி வெளுத்து வாங்கினார். கிளென் ஃபிலிப்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வேவும் ஜிம்மி நீஷமும் இணைந்து டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோரை மேலும் உயர்த்தினர்.
ஜிம்மி நீஷம் 13 பந்தில் 26 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி சதத்தை நெருங்கிய டெவான் கான்வே 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காதபோதிலும், அவரால் சதத்தை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 200 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.