டி20 உலகக்கோப்பை: பதும் நிஷங்கா அரைசதம்; இங்கிலாந்துக்கு 142 டார்கெட்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1இல் இன்று சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும் என்ற நிலையில் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 18 ரன்களில் குசால் மெண்டிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த நிஷங்கா - ராஜபக்ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பதும் நிஷங்கா அரைசதம் கடந்தார். பின் 45 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 67 ரன்களுடன் பதும் நிஷங்கா விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகாவும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இறுதியில் பனுகா ராஜபக்ஷாவும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்த வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டுகலை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.