காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் ஃபகர் ஸமான்; பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு!

Updated: Wed, Nov 02 2022 15:36 IST
Image Source: Google

டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. இதில் நடைபெற்றுவரும் சூப்பர் 12 சுற்றில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் என்ற பரபரப்பு எகிரியுள்ளது. 

ஏனெனில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ஐ பொறுத்தமட்டில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளன. எனவே கடைசி போட்டியில் வெற்றி பெறும் 2 அணிகள், குறிப்பாக நல்ல ரன்ரேட்டில் கடைசி போட்டியில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நியூசிலாந்தின் ரன்ரேட் சிறப்பாக உள்ளதால் கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலே நியூசிலாந்துக்கான வாய்ப்பு அதிகம். ஆனால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு ரன்ரேட் முக்கியம்.

அதேபோல குரூப் இரண்டை பொறுத்தமட்டில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அணி பாகிஸ்தான். ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை பலவீனமாக்கியது. வலுவான இந்தியாவிடம் தோற்றது கூட பரவாயில்லை. ஆனால் 132 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் ஜிம்பாப்வேவிடம் தோற்றது அந்த அணிக்கு மரண அடியாகவும், அணியின் சூழலை கீழிறக்கும் விதமாகவும் அமைந்தது.

அதன்பின்னர் நெதர்லாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான் அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் போட்டி முடிவுகளை பொறுத்துத்தான் பாகிஸ்தான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு அமையும். ஆனால் ஏதோ ஒருவகையில் பாகிஸ்தானுக்கு கடைசி 2 போட்டிகளிலும் வெல்லும் பட்சத்தில் குறைந்தபட்ச வாய்ப்பும் நம்பிக்கையும் உள்ளது.

ஆனால் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொள்ளப்போவதோ, தென் அப்பிரிக்காவை. இந்த உலக கோப்பையில் மிக வலுவான அணியாக திகழ்கிறது தென் ஆப்பிரிக்கா. இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணிக்கு எதிராக அடுத்த போட்டியில் விளையாடவுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிரடி வீரர் ஃபகர் ஸமான் காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரின்போது முழங்காலில் காயமடைந்த ஃபகர் ஸமான், சிகிச்சை முடிந்து ஃபிட்னெஸை பெற்று டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் முதல் 2 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி ஃபகர் ஸமான் அந்த போட்டியில் பேட்டிங்  செய்த போது மீண்டும் காயமடைந்தார். அந்த போட்டியில் 16 பந்தில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பெரும் பிரச்னையாக இருந்துவரும் நிலையில், அதை தீர்ப்பதற்காகத்தான் அணியில் எடுத்துவரப்பட்டார் ஃபகர் ஸமான். இந்நிலையில், மீண்டும் காயமடைந்து அதிரடி வீரரான ஃபகர் ஸமான் டி20 உலக கோப்பையிலிருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை