டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப், ஹர்திக் அபாரம்; இந்தியாவுக்கு 160 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சாளர்கள், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என 6 பௌலர்கள் உடன் இந்தியா களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அர்ஷ்தீப் சிங் மூலம் ஆபத்து காத்திருந்தது. அதன்படி கேப்டன் பாபர் ஆசாம் முதல் பந்திலேயேயும், முகமது ரிஸ்வான் 4 ரன்களிலும் அடுத்தடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - இஃப்திகார் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணிய்ன் ஸ்கோரையும் சிறுக சிறுக உயர்த்தினர். பின் ஒரு கட்டத்தில் அக்ஸர் படேலின் முதஜ்ல் ஓவரை வெளுத்து வாங்கிய இஃப்திகார் அஹ்மத் அந்த ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்சர்களை விளாசி அசத்தினார்.
இதன்மூலம் அவர் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். பின்னர் 51 ரன்கள் எடுத்த இஃப்திகார் அஹ்மத் முகமது ஷமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சதாப் கான், ஹைதர் அலி ஆகியோர் ஹர்திக் பாண்டியா வீசிய 14ஆவது ஓவரில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய முகமது நவாஸ், அதிரடி வீரர் ஆசிஃப் அலி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷான் மசூத் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்களையும், இஃப்திகார் அஹ்மத் 51 ரன்களையும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.