டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தின் வெற்றியைப் பறித்த மழை; கொண்டாட்டத்தில் அயர்லாந்து!
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்னில் இன்று நடந்த ஆட்டத்தில் குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 2ஆவது வெற்றி ஆர்வத்துடன் இந்த அணி களம் இறங்கியது. அயர்லாந்து முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் முதல் வெற்றிக்காக அந்த அணி களத்தில் குதித்தது.
மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மழைவிட்டபிறகு 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை.
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி - பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ரன்களே எடுக்க முடிந்தது.
இரண்டாவது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியது. போட்டியின் முடிவில், 19.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அயர்லாந்து அணி 157 ரன்கள் எடுத்தது. இதில், அயர்லாந்து கேப்டன் பால்பிரினி அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்
இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட், லியாம் லிவிங்ஸ்டன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில், 158 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
அதன்படி களமிறக்கிய இங்கிலாந்து அணிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் ஜோஸ் பட்லர் ரன் ஏதுமின்றியும், அலெக்ஸ் ஹேல்ஸ் 7 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - ஹாரி ப்ரூக் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். பின் 18 ரன்களில் ப்ரூக்கும், 35 ரன்களில் டேவிட் மாலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய மொயின் அலி ஒரு முனையில் அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்த, மழையால் ஆட்டம் மீண்டும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் ஆட்டம் 14.3 ஓவர்களில் நிறுத்தப்பட்டது.
மேலும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.