இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம் - மேத்யூ ஹைடன்!

Updated: Wed, Nov 09 2022 19:04 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது பாகிஸ்தான் அணி. சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. 

நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் வில்லியம்சன். மிட்செல் 53, நீஷம் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து. ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் விமர்சனத்துக்கு ஆளான பாபர் ஆசாம் - ரிஸ்வான் ஜோடி இன்று அபாரமாக விளையாடியது. 

முதல் 12 ஓவர்கள் வரை நியூசிலாந்தால் பாபர் - ரிஸ்வான் ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. 42 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார் பாபர். அப்போது ஸ்கோர் 105. ரிஸ்வான் 43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து 17-வது ஓவரின் முடிவில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் 2ஆவது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இந்நிலையில் வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான மேத்யூ ஹைடன் கூறுகையில், “இந்த நாள் மிகவும் சிறப்பானது. சில விசயங்கள் அற்புதமாக அமைந்தன. எல்லோரும் பாபர் - ரிஸ்வான் பற்றி பேசுவார்கள். எங்களுடைய பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்தை வீச முடிந்ததால் ஷாஹீன் அஃப்ரிடியை எதிர்கொள்வது கடினமாகி விட்டது. இறுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம். ஏனெனில் அப்போது அது அமர்க்களமான ஆட்டமாக அமையும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை