டி20 உலகக்கோப்பை: யூஏஇ-யை போராடி வீழ்த்தியது நெதர்லாந்து!

Updated: Sun, Oct 16 2022 17:11 IST
Image Source: Google

பதினாறு அணிகள் பங்கேற்கும் 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் பிற்பகலில் தொடங்கிய முதல் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சிராக் சுரி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் (2 சிக்சர்கள் 1 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.

அடுத்ததாக களமிறங்கிய காசிப் தாவுத் 15 ரன்களும் விரித்யா அரவிந்த் 18 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரஜித் சிங் 10 ரன்களிலும், பாஸ் டி லீட் 14 ரன்களிலும், மேக்ஸ் ஓடவுட் 23 ரன்களிலும், காலின் அக்கர்மேன் 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் டாம் கூப்பர் 8, வான் டெர் மெர்வெ ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். இறுதியில் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கடைசி வரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இதன்மூலம் நெதர்லாந்து அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை