டி20 உலகக்கோப்பை: குசால் மெண்டிஸ் அரைசதம்; அயர்லாந்தை பந்தாடியது இலங்கை!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை , நெதர்லாந்து , ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட் லாந்து , நமீபியா , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை வெளியேற்றப்பட்டன.
சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து , ஆஃப்கானிஸ்தான், இலங்கை அயர்லாந்து அணிகளும் , குரூப்-2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா , வங்கதேசம், ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்று உள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
அதன்படி ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் உள்ள இலங்கை- அயர்லாந்து அணிகள் மோதின. அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
2ஆவது ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது. பால்பிர்னி ஒரு ரன்னில் லகிரு குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் - ஹேரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் ஸ்டிர்லிங் 34 ரன்களிலும், டெக்டர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து அரைசதம அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.
அதன்பின் களமிறங்கிய அயர்லாந்து வீரர்களால், இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக மஹீஷ் தீக்க்ஷன, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் - தனஞ்செய டி சில்வா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் 31 ரன்கள் எடுத்த நிலையில் தனஞ்செய டி சில்வா ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் அரைசதம் கடக்க, அவருடன் ஜோடி சேர்ந்த சரித் அசலங்காவும் அதிரடியை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் 15 ஓவர்களிலேயே இலங்கை அணி இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 68 ரன்களையும், சரித் அசலங்கா 31 ரன்களையும் சேர்த்தார்.