டி20 உலகக்கோப்பை: ரிஸ்வான், மாலிக் விளையாடுவது உறுதி!
டி20 உலகக் கோப்பைப் தொடரின் 2ஆவது அரையிறுதியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வானும் சோயிப் மாலிக்கும் உடல்நலக்குறைவால் நேற்று அவதிப்பட்டார்கள். இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை எனத் தெரிய வந்தது. புதன் அன்று காலையில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார்கள்.
இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இருவருடைய உடற்தகுதியை முன்வைத்து பாகிஸ்தான் அணி இதுகுறித்த முடிவை இன்று எடுக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் பாகிஸ்தான் ரசிகர்களுக்குக் கவலை ஏற்பட்டது. இருவரில் ஒருவர் விளையாடாமல் போனாலும் பாகிஸ்தான் அணிக்குப் பின்னடைவாக இருக்கும். மேலும் அவர்கள் விளையாடமுடியாமல் போனால் அவர்களுக்கு பதிலாக சர்ப்ராஸ் அகமது, ஹைதர் அலி ஆகியோர் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Also Read: T20 World Cup 2021
ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தற்போது கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் ரிஸ்வானும் மாலிக்கும் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் இருவரும் விளையாடவுள்ளார்கள்.