ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்ற சாம் கரண்!

Updated: Mon, Nov 14 2022 09:05 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், காயத்திலிருந்து அணிக்குத் திரும்பிய சாம் கரண் இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதினைத் தட்டிச் சென்றுள்ளார். 

மேலும், இன்றையப் போட்டியில் அபாராக பந்துவீசிய அவர் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இன்றையப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வானார். இந்த உலகக் கோப்பை முழுவதும் அவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவரது எகானமி ஓவருக்கு 6.52 மட்டுமே. 

இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து பேசிய சாம் கரண், “மெல்போர்ன் மைதானம் மிகவும் பெரிய மற்றும் சதுர வடிவிலான மைதானம். எனது பந்து வீச்சு கண்டிப்பாக கைகொடுக்கும் என எனக்கு தெரிந்தது. அதனால் பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் மூலையை நோக்கி ஷாட் அடிப்பது போன்றே பந்துகளை வீசினேன். ஆனால், நாங்கள் நினைத்த அளவிற்கு விக்கெட் சிறப்பாக இல்லை. 

பந்தினை துரத்தி பிடிப்பது என்பது கடினமாக இருந்தது. அதனால் நான் மெதுவாக பந்து வீசி விக்கெட் எடுக்கும் முயற்சியில் இறங்கினேன். நாங்கள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தினை வென்று விட்டோம். இந்த தருணம் மிகவும் மறக்க முடியாததாகும். பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடினார். அணி எப்போது கடினமான சூழலில் உள்ளதோ அப்போதெல்லாம் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். பலர் அவரது ஆட்டம் குறித்து கேள்வி கேட்கலாம். ஆனால், அவர் சிறந்த ஆட்டக்காரர். 

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் சிறப்பாக அமைந்தது. நான் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறேன். நாங்கள், நான் விளையாடிய முதல் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் என்னுடைய பேட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை