பந்தை மெதுவாக வீசுவதே எனது பலம் - ஆதில் ரஷித்!

Updated: Sun, Nov 13 2022 16:03 IST
T20 World Cup: Getting wickets gave me the confidence to bowl it slower, says Adil Rashid (Image Source: Google)

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இரு அணிகளும் களமிறங்கின.

அதன்படி முதலில் பேட்டிங்  ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை தொடக்கம் முதலே கட்டுப்பாட்டில் வைத்தனர் இங்கிலாந்து பவுலர்கள். தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை 15 ரன்களுக்கு சாம் கரன் வீழ்த்தினார். கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த முகமது ஹாரிஸை வெறும் 8 ரன்னுக்கு வெளியேற்றிய அடில் ரஷீத், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களுக்கு வீழ்த்தினார்.

இஃப்டிகார் அகமது ரன் அடிக்காமல் டக் அவுட்டானார். ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்தார். 28 பந்தில் 38 ரன்கள் அடித்த ஷான் மசூத்தை அதன்பின்னர் நீடிக்கவிடாமல் சாம் கரன் அவுட்டாக்கி அனுப்பினார். ஷதாப் கான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை சாம் கரனும் கிறிஸ் ஜோர்டானும் இணைந்து அருமையாக வீசி, 4 ஓவரில் 20 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது.

இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாம் கரண் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஆதில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இந்நிலையில் இன்னிங்ஸ் முடிவுக்கு பின் பேசிய ஆதில் ரஷித், “நான் பந்தை மெதுவாக வீசச்செய்தேன், விக்கெட்டுகளைப் பெறுவது மெதுவாக பந்து வீசும் நம்பிக்கையை எனக்கு அளித்தது, அதுவே எனது பலம். இது ஒரு தனிப்பட்ட விளையாட்டு அல்ல, ஓவ்வொருவருடைய பங்களிப்பும் மிகவும் அவர்சியம். மேலும் அணி ஒவ்வொரு விஷயத்திலும் மகிழ்ச்சியாக இருக்கும் வரை, அதுதான் முக்கிய விஷயம். விக்கெட்டுக்கள் வந்தால், அருமை, ஆனால் அது அணியைப் பற்றியது” என தெரிவித்தார். 

அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மெய்டன் ஓவரை வீசிய நான்காவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் ஆதில் ரஷித் பெற்றுள்ளார். முன்னதாக 2009ஆம் ஆண்டும் பாகிஸ்தானின் முகமது அமீர், 2012ஆம் ஆண்டு இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ், 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸின் சாமுவெல் பத்ரி ஆகியோர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெய்டன் ஓவர்களை வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை