நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பையும் இழந்து வெளியேறியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40வது போட்டியில் நெதர்லாந்து அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அகெர்மன் 41 ரன்களும், மெய்பர்க் 37 ரன்களும் எடுத்தனர். இதன்பின் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது. டேவிட் மில்லர், டி காக் என தென் ஆப்ரிக்கா அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Advertisement

நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக க்ளோவர் 3 விக்கெட்டுகளையும், லீட் மற்றும் கிளாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தான் – வங்கதேசம் இடையேயான போட்டியின் முடிவே குரூப் 2 பிரிவின் இரண்டாவது அரையிறுதி போட்டியாளரை தீர்மானிக்கும்.

இந்தநிலையில், நெதர்லாந்து அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா, இந்த தோல்வி மிகுந்த வேதனையும், ஏமாற்றத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெம்பா பவுமா பேசுகையில், “இந்த தோல்வி மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். இந்த போட்டி நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டி என்பது தெரிந்தும், நாங்கள் சொதப்பிவிட்டோம். இந்த தோல்வியை எங்கள் வீரர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று நான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததும் தோல்விக்கான காரணமாக அமைந்துவிட்டது. அவர்களை நாங்கள் 158 ரன்கள் எடுக்கவிட்டதும் எங்களுக்கு பிரச்சனையாக மாறிவிட்டது. பேட்டிங்கிலும் நாங்கள் சொதப்பிவிட்டோம், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News