வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Mon, Nov 14 2022 10:13 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவிச்சை தேர்வு செய்தது. 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சான் மசூத் 38 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக சாம் கர்ரான் 3 விக்கெட்டுகளையும், அடில் ரசீத் மற்றும் கிரிஸ் ஜோர்டன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்பின் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி தேவையான ரன்களை எடுத்தாலும், மிடில் ஓவர்களில் பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஹாரி ப்ரூக் போன்ற வீரர்களின் விக்கெட்டை எல்லாம் இலகுவாக வீழ்த்திய பாகிஸ்தான் அணியால், இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகனான பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை இறுதி வரை வீழ்த்த முடியவில்லை. மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், 19வது ஓவரில் இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி.20 உலகக்கோப்பையையும் தட்டி தூக்கியது.

இந்தநிலையில், பாகிஸ்தான் அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், பந்துவீச்சாளர்களே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என பாராட்டியுள்ளார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “இறுதி போட்டிகள் எப்பொழுதும் சவாலானது தான். இறுதி போட்டிகளில் குறிப்பாக சேஸிங் செய்யும் பொழுது பழைய போட்டிகள் அனைத்தையும் மறந்துவிட வேண்டும். சாம் கர்ரான் மற்றும் அடில் ரசீத் ஆகியோர் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டனர். அவர்களே இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம். 

ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. பாகிஸ்தான் அணியை 130 ரன்களில் கட்டுப்படுத்தியது சாதரண விசயம் இல்லை. இந்த தொடரின் துவக்கத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்தது எங்களுக்கு பல விசயங்களை கற்று கொடுத்தது. தவறுகளில் இருந்து தான் பாடம் கற்று கொள்ள முடியும். சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, நாட்டிற்காக விளையாடுவது பெருமையான விசயம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை