இந்தியா vs இங்கிலாந்து, அரையிறுதிச்சுற்று - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து களமிறங்கும்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் சிறந்த பார்மில் உள்ளனர். விராட் கோலி 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விராட் கோலி விளாசிய 82 ரன்கள் பிரம்மிக்க வைத்தன.
சூர்யகுமார் யாதவ் 3 அரை சதங்களுடன் 225 ரன்கள் விளாசி 3ஆவது இடம் வகிக்கிறார். ஜிம்பாப்வேக்கு எதிராக சூர்யகுமார் 360 டிகிரி கோணத்தில் சுழன்று அடித்து 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசியது வியக்க வைத்தது. அதேவேளையில் தொடக்க ஆட்டங்களில் பார்மின்றி தவித்த கேஎல் ராகுல் கடைசி ஆட்டங்களிலும் அரை சதம் விளாசி பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.
இவர்கள் 3 பேரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். டாப் ஆர்டரில் கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம் மட்டுமே கவலை அளிப்பதாக உள்ளது. 5 போட்டிகளில் அவர், 89 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அரை இறுதி ஆட்டம் என்பதால் ரோஹித் சர்மா கூடுதல் பொறுப்புடன் செயல்படுவதில் கவனம் செலுத்தக்கூடும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சிறிது மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அநேகமாக அக்சர் படேலுக்கு பதிலாக யுவேந்திர சாஹல் இடம் பெற வாய்ப்பு உள்ளது. மேலும் ரிஷப் பந்த்தும் தொடர்ந்து விளையாடகக்கூடும்.
இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். புவனேஷ்வர் குமார் தொடக்க ஓவர்களில் தனது ஸ்விங்கால் நெருக்கடி கொடுத்தால் கூடுதல் பலம் கிடைக்கும். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் அஸ்வின், அக்சர் படேல் ஆகியோர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இவர்கள் கூட்டாக 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ள நிலையில் எந்த ஆட்டத்திலும் முழுமையாக 4 ஓவர்களை வீசவில்லை.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டுள்ளது. தொடக்க வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் தலா 4 ஆட்டங்களில் முறையே 125 மற்றும் 119 ரன்களே சேர்த்துள்ளனர். ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் 58 ரன்கள் எடுத்துள்ளார். மொயின் அலி, ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரிடம் இருந்த பெரிய அளவிலான இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.
இது ஒருபுறம் இருக்க 3ஆவது இடத்தில் களமிறங்கக்கூடிய டேவிட் மலான், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் காயம் அடைந்தார். இதனால் அவர், இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது சந்தேகம்தான். டேவிட் மலானும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் அவர், 4 ஆட்டங்களில் 56 ரன்கள் எடுத்திருந்தார். டேவிட் மலான் களமிறங்காத பட்சத்தில் அந்த இடத்தில் ஸ்டோக்ஸ் விளையாடக்கூடும்.
பந்து வீச்சில் அதிவேகமாக செயல்படக்கூடிய மார்க் வுட் காயத்தில் அவதிப்பட்டு வருகிறார். எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அவர், உடற்தகுதியை எட்டிவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஒருவேளை அவர், களமிறங்காத பட்சத்தில் அவருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டான் அல்லது தைமால் மில்ஸ் சேர்க்கப்படக்கூடும். பென் ஸ்டோக்ஸ், சேம் கரண், ஆதில் ரஷித் ஆகியோர் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இதில் சேம் கரணின் இடது கை பந்து வீச்சு தொடக்க ஓவர்களில் அச்சுறுத்தல் அளிக்கக்கூடும்.