ஜிம்பாப்வேவுடனான தோல்வி மன வேதனையை கொடுக்கிறது - பாபர் ஆசாம்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 24ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின. ஆஸ்திரேலியின் பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி பெரிதாக ரன்னும் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி வெறும் 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சியான் வில்லியம்ஸ் 31 ரன்களும், கிராய்க் எர்வீன் 19 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் 4 விக்கெட்டுகளையும், ஷாதப் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை விட பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டது. கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் சான் மசூத் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்களின் சொதப்பல் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய ஜிம்பாப்வே அணியின் பிராட் எவான்ஸ் முதல் மூன்று பந்துகளில் 8 ரன்கள் விட்டுகொடுத்தாலும், நான்காவது பந்தை டாட் பாலாகவும், ஐந்தாவது பந்தில் விக்கெட்டும் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இதன் மூலம் கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை சந்தித்த பாகிஸ்தான் அணி, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்துவிட்டு, இரண்டாவது ரன் ஓடும் போது ஷாஹீன் அஃப்ரிடி விக்கெட்டை இழந்ததால் ஜிம்பாப்வே அணி 1 ரன் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
ஜிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ரசா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் பிராட் எவான்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணிக்கு எதிரான கடந்த போட்டியிலும் கடைசி பந்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, தற்போது ஜிம்பாப்வே அணியுடனும் கடைசி பந்தில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் நடப்பு தொடரில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு இனி அரையிறுதி வாய்ப்பு எட்டக்கணியாகவே இருக்கும் என தெரிகிறது.
இந்தநிலையில், ஜிம்பாப்வே அணியுடனான இந்த மோசமான தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம், இந்த தோல்வி மிகுந்த மன வேதனையை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாபர் அசாம், “130 ரன்கள் என்ற இலக்கை நாங்கள் வெறும் 10 ஓவர்களில் எட்டியிருக்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்துள்ளோம், இது மிகுந்த மனவேதனையையும், பெரும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது. பேட்டிங்கில் நாங்கள் மிக மோசமாக செயல்பட்டோம். எங்கள் அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் இருந்த போதிலும் இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளோம்.
தொடக்க வீரர்களான நானும், ரிஸ்வானும் பவர்ப்ளே ஓவர்களிலேயே விக்கெட்டை இழந்துவிட்டோம். ஷாதப் கான் – சான் மசூத் கூட்டணி நன்றாகவே விளையாடியது, ஆனால் எதிர்பாராத விதமாக ஷாதப் கான் விக்கெட்டை இழந்ததும், அதன்பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததும் எங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது. முதல் 6 ஓவர்களை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஜிம்பாப்வே அணியை வெறும் 130 ரன்களில் சுருட்டிய போதிலும் எங்களால் பேட்டிங்கில் 130 ரன்களை எட்ட முடியாதது வேதனையான விசயம். நாங்கள் செய்த தவறுகள் என்ன என்பதை கண்டறிந்து அடுத்த போட்டியில் நிச்சயம் முழு பலத்துடன் மீண்டு வருவோம்” என்று தெரிவித்தார்.