இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது. டி20 உலகக் கோப்பை 2022 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 32, ஷான் மசூத் 38 , சதாப் கான் 20 ஆகியோர் ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் அடித்தனர். அடுத்து முகமது ரிஸ்வானை 15 தவிர்த்து யாரும் இரட்டை இலக்க ரன்களை அடிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 137/8 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர் ஜாஸ் பட்லர் 26, அலேக்ஸ் ஹேல்ஸ் 1 , பிலிப் சால்ட் 10 ஆகியோர் பவர் பிளே ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அடுத்து ஹேரி ப்ரூக்ஸ் 20, மொயின் அலி 19 ஆகியோர் பென் ஸ்டோக்ஸுடன் 52 பார்ட்னர்ஷிப் அமைத்ததால் இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 138/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று கோப்பையை தட்டித்தூக்கியது.
இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர்,‘‘கடந்த சில வருடங்களாகவே இங்கிலாந்து அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்குமுன் பாகிஸ்தானில் டி20 தொடரில் விளையாடினோம். அதன்மூலம், லெவன் அணியை தயார்செய்தோம். அயர்லாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தப் பிறகு எங்களது கம்பேக் மிகவும் அருமையாக இருந்தது. சில ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்கள் சிறப்பான முறையில் அணியை தயார்செய்தார்கள்.
பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது அடில் ரஷித் 12ஆவது ஓவரில் பாபர் அசம் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து மெய்டன் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதன்பிறகுதான், பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இத்தொடர் முழுவதிலும் ரஷித் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அதேபோல் பென் ஸ்டோக்ஸும் அபாரமாக விளையாடினார். எதையும் சந்திக்க தாயர் என்ற மனநிலை அவரிடம் இருக்கிறது. அதேபோல், மொயின் அலி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி, ஒரு ஓவருக்கு முன்பே போட்டியை முடிக்க முக்கிய காரணமாக இருந்தார்’’ எனத் தெரிவித்தார்.