டி20 உலக கோப்பை: தொடரை நடத்தும் போட்டியில் இணைந்த இலங்கை!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா தொற்று பரவல் காரணமாக உலகக்கோப்பை தொடரை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை நடத்துவது குறித்து ஜூன் 28ஆம் தேதிக்குள் பிசிசிஐ பதிலளிக்குமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
ஒருவேளை இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஒருவேளை இந்தியாவில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்த முடியாத சூழலில் வாய்ப்பு கிடைத்தால் எங்கள் நாட்டில் நடத்தலாம் என ஓமன் கிரிக்கெட் வாரியம் சர்வதேச நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் பல நாடுகளும் தற்போது இந்தாண்டிற்கான டி20 உலகக் கோப்பையை தங்கள் நாட்டில் நடத்த அனுமதி கோரி வருகின்றன.
அதில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியமும் இணைந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் கோரத்தாண்டமாடி வரும் கரோனா தொற்று காரணமாக, டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஒருவேளை இந்த தொடரை இந்தியாவில் நடத்த முடியாத சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து விவாதிக்க பட்டு வருகின்றன. ஆனால் பிசிசிஐ முடிந்தவரை இத்தொடரை இந்தியாவில் நடத்தவே விருப்பம் காட்டி வருகிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பையை இலங்கை நடத்துமாறு பிசிசிஐ யிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் உலக கோப்பையை எங்கு நடத்துவது என்பது பிசிசிஐ தேர்வு செய்யும் முடிவில் தான் உள்ளது என்பதால், இம்மாத இறுதியில் தான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.