டி20 உலகக்கோப்பை: விராட் கோலி பாராட்டிய தப்ரைஸ் ஷம்ஸி!

Updated: Tue, Oct 25 2022 12:30 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சான் மசூத் 52 ரன்களும், இஃப்திகார் அஹமத் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா அகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (4), கே.எல் ராகுல் (4), சூர்யகுமார் யாதவ் (13), அக்‌ஷர் பட்டேல் (2) போன்றோர் ஏமாற்றம் கொடுத்தாலும், 5வது விக்கெட்டிற்கு கூட்டணி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – விராட் கோலி ஜோடி பொறுப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 37 பந்துகளில் 40 ரன்களும், கடைசி இரண்டு ஓவரில் 30+ ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில், பயமே இல்லாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இறுதி வரை களத்தில் இருந்து 82 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் இலக்கை எட்டிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், தன்னந்தனியாக போராடி இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்த விராட் கோலியை, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் புகழ்ந்து தள்ளி வருகிறது. முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் விராட் கோலியை மனதார பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில், விராட் கோலியை பாராட்டும் வகையில், தென் ஆப்ரிக்கா வீரரான தப்ரைஸ் ஷம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் விராட் கோலியை விமர்சித்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்துள்ளார்.

இது குறித்து ஷம்சி பதிவிட்டுள்ள பதிவில், “சிலர் விராட் கோலியை உலக கோப்பை அணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விமர்சித்தார்கள். ஆனால் கோலியை விமர்சித்தவர்கள் தற்போது டான்ஸ் ஆடி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

கடந்த காலங்களில் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்காக விடாமல் போராடி வெற்றி பெற்றுத் தந்த வீரரை, சமீப காலமாக சரியாக விளையாடவில்லை என்பதற்காக கீழே தள்ளிவிடாமல் எப்படி பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்.” என தடாலடியாக பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை