அடுத்தடுத்து உலக சாதனை நிகழ்த்திய ஜெகதீசன்; தமிழ்நாடு அணி தனித்துவ சாதனை!
இந்தியாவின் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 6ஆவது சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அருணாசல பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி இந்த சீசன் முழுவது தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரன்களை குவித்து வரும் தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் நாராயன் ஜெகதீசன் - சாய் சுதர்சன் இணை இன்றும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதிலும் இந்த சீசனில் அடுத்தடுத்து 4 சதங்களை விளாசியிருந்த ஜெகதீசன் இன்றும் தனது ருத்ரதாண்டவத்தை தொடர்ந்தார். அவருக்கு துணையாக சாய் சுதர்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இப்போட்டியில் சதமடித்து எதிரணி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடவைத்தனர்.
இப்போட்டியிலும் நாராயன் ஜெகதீசன் சதமடித்ததன் மூலம் விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையைப் பதிவுசெய்தததுடன், உலகலாவிய முதல் தர கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை விளாசிய ஒரே வீரர் எனும் மாபெரும் இமாலய சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் இப்போட்டியில் ஜெகதீசன் 277 ரன்களை குவித்ததன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் தனித்துவ உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த பட்டியளில் இங்கிலாந்தின் ஆலிஸ்டன் பிரௌன் கடந்த 2002 ஆம் ஆண்டு 268 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஜெகதீசன் முறியடித்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள்
- என் ஜெகதீசன் -277
- ஆலிஸ்டர் பிரௌன் -268
- ரோஹித் சர்மா - 264
- டி ஆர்சி ஷார்ட் - 257
அதன்பின் 154 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன் ஆட்டமிழக்க, மறுமுனையில் முற்சதம் விளாசி மற்றொரு சாதனையையும் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என 277 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்டார்.
ஆனாலும் இந்த இணை முதல் விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் முறையில் 416 ரன்களைக் குவித்தது.இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அடிக்காப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது.
இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பாபா சகோதரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த 50 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 506 ரன்களை குவித்தது. இதுவும் ஒரு வரலாற்று சாதனை பட்டியளில் இடம்பிடித்தது. ஏனெனில் இந்தாண்டு நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 498 ரன்களை குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதனைத் தற்போது தமிழ்நாடு அணி முறியடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்
- தமிழ்நாடு - 506/2
- இங்கிலாந்து - 498/6
- சர்ரே - 496/4
- இங்கிலாந்து - 481/4
- இந்தியா ஏ - 458/4
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பாபா இந்திரஜித் மற்றும் பாபா அபாரஜித் ஆகியோர் தலா 31 ரன்களைச் சேர்த்திருந்தனர். அருணாச்சல பிரதேச அணி தரப்பில் சேட்டன் ஆனந்த், டோரியா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.