உலகக்கோப்பை 2023: வங்கதேச அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர் நீக்கம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணியை வரும் 28ஆம் தேதி அறிவிக்க வேண்டும். இந்த தொடரில் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை அறிவித்த நிலையில் வங்கதேசமும் இலங்கையும் இன்னும் தங்களது அணி விவரத்தை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் வங்கதேச அணியில் கடும் மோதல் ஏற்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல்கேஜி சிறுவன் போல் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்த வீரரை நீங்கள் தேர்வு செய்தால் நான் உலக கோப்பைக்கு வரமாட்டேன் என்று போர் கொடி தூக்கி உள்ளார்.எனினும் அவருடைய இந்த பேச்சுக்கு நியாயமான காரணமும் ஒன்று இருக்கிறது.
அதாவது வங்கதேச அணியில் கேப்டனாக இருந்த தமீம் இக்பால் அண்மையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்றார். இதனையடுத்து வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா பஞ்சாயத்து செய்து மீண்டும் தமீம் இக்பாலை அணிக்குள் வர வைத்தார். இந்த நிலையில் தமீம் கேப்டனாக தொடர விரும்பவில்லை என தெரிவித்தவுடன் தற்போது மீண்டும் ஷாகிப் அல் ஹசன் அந்த பொறுப்புக்கு வந்தார்.
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தமீம் இக்பால் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் தமக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் என்னால் முழு உலக கோப்பையும் விளையாட முடியாது என்றும் தமீம் இக்பால் கூறிவிட்டார். எனினும் நீங்கள் கண்டிப்பாக வந்தே தான் ஆக வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டது.
இதனை அடுத்து தாம் உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டால் என்னால் 5 போட்டிகளில் தான் விளையாட முடியும் என தமீம் இக்பால் கூறியிருக்கிறார். இதுதான் தற்போது பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. தமீம் இக்பாலின் இந்த செயலால் கடுப்பான ஷாகிப் அல் ஹசன் முழு உடல் தகுதி இல்லாத நபரை உலகக் கோப்பையில் சேர்க்கக்கூடாது என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்.
எனக்கு முழு உடல் தகுதி இருக்கும் வீரர் தான் தேவை என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். ஒருவேளை தமீம் இக்பால் உலகக்கோப்பை தொடரில் அறிவிக்கப்பட்டார். தான் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதோடு உலகக்கோப்பை தொடருக்கு வரமாட்டேன் என்றும் ஷகிப் அல் ஹசன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து தமிம் இக்பால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச அணி : ஷாகிப் அல் ஹசன் (கே), தன்சித் தமீம், லிட்டன் தாஸ், நஜிமுல் ஹுசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹதி ஹசன், நசும் அகமது, மஹதி ஹசன், தஸ்கின் அகமத், ஹசன் மஹ்மூத், முஸ்தாபிஸூர், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் தன்சிம் சாகிப்.