ரமந்தீப் சிங் இருக்கும் போது ஹர்ஷித் ராணா எப்படி ஆட்டத்திற்குள் வந்தார் - ஜோஸ் பட்லர்!

Updated: Sat, Feb 01 2025 13:09 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டியில், அரைசதம் அடித்ததற்காக ஷிவம் துபே ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி எடுத்த முடிவு ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது அவருக்கு தலையில் பந்து தாக்கிய நிலையிலும், அடுத்த பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அதன் பிறகு அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பீல்டிங் செய்ய வரவில்லை, மேலும் மூளையதிர்ச்சி காரணமாக, அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டார். துபேவுக்குப் பதிலாக வந்த ஹர்ஷித் ராணா சிறப்பாக செயல்பட்டதுடன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி தொடரை வெல்வதற்கும் மிகப்பெரும் காரணமாக அமைந்தார்.

இந்நிலையில், ஷிவம் தூபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக விளையாட அனுமதிக்கப்பட்டது குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணியின் இந்த முடிவில் நாங்கள் உடன்படவில்லை. ஏனெனில் இது ஒருவருக்கு ஒருவர் சரியான மாற்றாக இல்லை. ஒருவேளை ஷிவம் துபே 25 மைல் வேகத்தில் பந்து வீசலாம், அல்லது ஹர்ஷித் தனது பேட்டிங்கை மேம்படுத்தியிருக்கலாம்.

மேலும் அவர்களிடம் ரமந்தீப் சிங் எனும் ஒரு மாற்று வீரர் இருந்த நிலையில், ஹர்ஷித் ராணா எப்படி ஆட்டத்திற்குள் வந்தார் என்பது எங்களுக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. இதுகுறித்து போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்திடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் இந்த விஷயத்தில் நடுவர்கள் எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. நான் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​'ஹர்ஷித் ராணா யாருக்கு பதிலாக இருக்கிறார்' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

Also Read: Funding To Save Test Cricket

அதனை நான் கள நடுவரிடம் விசாரித்த போது அவர் ஷிவம் தூபேவுக்கு பதிலாக கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக விளையாடுவதாக என்னிடம் கூறினார். அந்த முடிவானது எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஏனெனில் போட்டி நடுவரே இந்த முடிவை எடுத்துள்ளார். எங்களிடம் இதுகுறித்த அந்த அலோசனையும் கேட்கப்படவில்லை” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெய்டர் குக்கும் இதுகுறித்து விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை