விராட் கோலியின் முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை - ஷர்துல் தாக்கூ!
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, கடைசியாக நடந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார்.
விராட் கோலியின் கேப்டன்சியில் 68 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய அணி 40 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்தியாவில் ஆடிய 31 டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்சியில் இரண்டே இரண்டு தோல்விகள் மட்டுமே. கோலியின் கேப்டன்சியில் வெளிநாடுகளில் ஆடிய 36 டெஸ்ட் போட்டிகளில் 16 வெற்றிகளை பெற்றது இந்திய அணி.
வெளிநாட்டில் வெற்றி சதவிகிதம் 44.44 ஆகும். இதுவே வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆசிய கேப்டனின் அதிகபட்ச வெற்றி விகிதம். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் வெற்றி விகிதம் 58.82 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றி விகிதம் கொண்ட கேப்டன்கள் பட்டியலில் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். ஸ்டீவ் வாக், டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகிய மூவருக்கு அடுத்த 4ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி.
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவந்த நிலையில், குறிப்பாக வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்துவந்த நிலையில், விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து அவர் விலகியது அனைவருக்குமே அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர், “விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது உணர்ச்சிமிகு தருணம். அவரது கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்துவந்தது.
தோற்ற போட்டிகளிலும் கூட, மிகவும் நெருக்கமாக சென்றே தோற்றோம். கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், அவர் கேப்டன்சியிலிருந்து விலகுவார் என்று யாருமே நினைத்துக்கூட பார்க்கவில்லை. அது அதிர்ச்சிகரமான முடிவாக இருந்தாலும், அவரது முடிவை மதிக்கிறோம்” என்று தெரிவித்தார்.