மகளிர் உலகக்கோப்பை 2022: புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கரோனா சூழல் காரணமாகப் புதிய விதிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி. அணியில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டால் ஆட்டத்தைத் தொடர்வதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி ஓர் அணியில் பலரும் கரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், அப்போது கரோனாவால் பாதிக்கப்படாத 9 வீராங்கனைகளைக் கொண்டு ஓர் அணி களமிறங்கலாம். வேண்டுமானால் அணியில் உள்ள இரு பெண்களை ஃபீல்டிங்குக்கு அனுமதிக்கலாம்.
ஆனால் அவர்கள் பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட அனுமதி கிடையாது. ஒவ்வொரு அணியிலும் 15 வீராங்கனைகளோடு கூடுதலாக 3 மாற்று வீராங்கனைகளும் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.