ஐபிஎல் 2022: ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கலாம்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்த அணிகள் கொண்டு வரப்படுமானால் மற்ற அணிகளில் இருக்கும் முக்கிய வீரர்கள் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதால் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்காக மெகா ஏலம் நடத்தப்படவுள்ளது. இதனால் புதிதாக வரும் 2 அணிகளுக்கு சிறப்பு வசதியாக ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்கள் வரை நேரடியாக ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என பிசிசிஐ கூறியிருந்தது. அது இந்திய வீரராகவும் இருக்கலாம் அல்லது அயல்நாட்டு வீரராகவும் இருக்கலாம். இதனால் மற்ற ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி பேசுப்பொருளாக இருந்தது.
இந்நிலையில் மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களை தக்கவைக்கலாம், 2 அயல்நாட்டு வீரர்களை தக்கவைக்கலாம். ஆனால் மொத்தமாக 4 வீரர்களை மட்டுமே அணிக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.90 கோடி வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும். அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த தொகை ரூ.95 கோடி மற்றும் ரூ.100 கோடி என உயரும். ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள நினைத்தால் மொத்த தொகையில் ரூ.35 - 40 கோடி வரை அதற்காகவே செலவிட வேண்டிய சூழல் ஏற்படலாம் எனக்கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையில் தான் மற்ற வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தின் போது அணிகளுக்கு RTM கார்டு என்ற வசதி கொடுக்கப்படும். அதாவது ஒரு அணி தனக்கு விருப்பமான வீரரை தக்கவைக்காமல் வெளியேற்றிவிட்டால், ஏலத்தின் போது RTM கார்டை பயன்படுத்தி எந்தவித போட்டியும் இன்றி அதே வீரரை மீண்டும் ஏலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த முறை இந்த வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.