சேஸிங் எங்களுக்கு எப்போதும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கிறது - டெம்பா பவுமா!

Updated: Sat, Oct 28 2023 10:32 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.  இந்தப் போட்டியில் டாஸ் வென்ற் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 270 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 50, சௌத் ஷகீல் 52 ரன்களை எடுத்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி சேஸிங் செய்த போது பாகிஸ்தான் கடைசி சில ஓவர்களில் மட்டும் விக்கெட்களை இழந்து தடுமாறியது. இருப்பினும் தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  தென் ஆப்பிரிக்கா ஒரு கட்டத்தில் 250 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. 10 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்து சரிந்து 48வது ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி விக்கெட்டுக்கு வந்த ஷம்சி அவுட் ஆகி விடுவாரோ என்ற பதற்றம் அனைவருக்குமே இருந்தது.

 

ஆனால், அவர் 6 பந்துகளை சந்தித்து அதில் 4 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் கடைசி நிமிடங்களில் பெரிய பங்கு வகித்தார். இந்த வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா "இந்த வெற்றித் தருணம் பெரும் குழப்பத்துக்கு பின் வந்துள்ளது. எங்கள் வீரர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள். ஷம்சியை கொண்டாடி வருகிறார்கள். நகத்தை கடிக்க வைத்த முடிவாக இருந்தது. நீங்கள் தென்னாப்பிரிக்க ரசிகராக இருந்தால் நிச்சயம் நீங்கள் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

சேஸிங் எங்களுக்கு எப்போதும் அழுத்தம் மிகுந்ததாக இருக்கிறது. அதை சரி செய்ய நாங்கள் எதுவுமே செய்யவில்லை. வெற்றிக்கு பின் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். நாங்கள் சில விஷயங்களை பேசினோம். ஆனால், சில விஷயங்களை நாங்கள் சரி செய்யாமல் தூக்கி எறிந்து விட்டோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் சரியாக உள்ளது. ஆனால், சேஸிங்கில் எங்களிடம் அதே போன்ற திட்டம் இருக்கிறதா? என்று கேட்டால் என்னால் உறுதியாக கூற முடியாது.

ஷம்சி இந்தப் போட்டியில் அபாரமாக செயல்பட்டார். முதலில் பந்துவீச்சில் அணிக்கு கை கொடுத்தார். பின் பேட்டிங்கில் கை கொடுத்தார். சமூக ஊடகங்களில் தன் பேட்டிங் திறன் குறித்து ஷம்சி பெருமையாக பேசுவதை பார்த்து இருக்கிறோம். அடுத்த இரு வாரங்களுக்கு அது நிற்காமல் நடக்கும். ஆனால், ஷம்சி போன்ற மூத்த வீரர் அப்படி பேட்டிங் செய்தது மிகவும் நன்றாக இருந்தது" என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை