யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணிக்கு சச்சின் வாழ்த்து!
ஐரோப்பிய நாடுகளின் முன்னணி 24 அணிகள் மோதிய யூரோ கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்தப்போட்டியில், ஜார்ஜியோ சியெலினி தலைமையிலான இத்தாலி அணியும், ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து இத்தாலி அணிக்கு மட்டுமல்ல, போட்டியைக் கண்டுகொண்டிருந்த அத்தனை பேருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதன்பின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் லியோனார்டோ போனூசி கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் இரண்டாம் பாதி ஆட்டம், 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
ஆட்டம் சமநிலையில் இருந்ததால், கூடுதலாக அரைமணி நேரம் வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், போட்டியின் முடிவை தீர்மானிக்க ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
அதன்பின் பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இத்தாலி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன் மூலம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலி அணி யூரோ கோப்பை கால்பந்து தொடரில் பட்டத்தை வென்று சாதித்தது.
இத்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணிக்கு பல்வேறு விளையாட்டைச் சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியா கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் தனது வாழ்த்து செய்தியை ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
சச்சினின் பதிவில்,“யூரோ 2020 சாம்பியன்களாக மாற கடுமையாக போராடி வெற்றி பெற்ற இத்தாலி அணிக்கு வாழ்த்துக்கள். அதேசமயம் இறுதிப் போட்டியை எட்டுவதற்கும், இறுதிவரை ஆட்டத்ததில் பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். வார இறுதியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்திய ஒரு ஆட்டம்” என்று பதிவிட்டுள்ளார்.