கரோனா அச்சுறுத்தல்: ஒரு கோடி நிதியுதவி!

Updated: Fri, Apr 30 2021 10:05 IST
Image Source: Google

கரோனா தொற்றின் 2ஆம் அலை இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளொன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் வாங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசிற்கும் தன்னார்வல அமைப்புகளுக்கும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இளம் தொழிலதிபர்கள் தொடங்கப்பட்டுள்ள மிஷண் ஆக்சிஜன் இந்தியா என்ற திட்டத்திற்கு அவர் இந்த உதவியை செய்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கரோனா 2ஆம் அலை மருத்துவ துறையை கடும் அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது.

இதற்காக இளம் தொழிலதிபர்கள் ஒன்றிணைந்து ஆக்சிஜன் வாங்க திட்டத்தை தொடங்கியுள்ளார். அதில் நானும் பங்காற்றியுள்ளேன். விரைவில் அவர்களது சேவை இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றடையும் என நம்புகிறேன். நான் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு என்னுடம் நீங்கள் அனைவரும் துணை இருந்தீர்கள். தற்போது கொரோனாவை எதிர்த்து போராட நாம் ஒன்றிணைந்து நிற்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் கரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை