கம்மின்ஸ் அவரது ஆட்டத்திற்காக பாராட்டப்பட வேண்டியவர் - ஹர்பஜன் சிங்!

Updated: Wed, Jun 21 2023 13:51 IST
Image Source: Google

உலகப் புகழ்பெற்ற ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் ஆரம்பித்து நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நேற்று பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா தரப்பில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு கேப்டன் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் இருவரும் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்கள் அணியை அபாரமாக வெற்றிபெற வைத்தார்கள். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்காமல் போய்விட்டது. அவர் பந்துவீச்சாளர்களை மாற்றியும் களத்தெடுப்பாளர்களை மாற்றியும், பல வியூகங்களை வகுத்தும் பலன் கிடைக்கவில்லை.

அதேசமயத்தில் புதிய பந்தை வாங்குவதற்கான வாய்ப்பு இருந்தும், வாங்காமல் ஜோ ரூட்டை வைத்து பழைய பந்தில் வீசி அலெக்ஸ் ஹேரி விக்கெட்டை வீழ்த்த வைத்தார். அதற்குப் பிறகு நெடு நேரமாக அவர் தொடர்ந்து பழைய பந்தையே வைத்து அணியை வழி நடத்தினார்.

தற்பொழுது இங்கிலாந்தின் தோல்வி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் பிரபல சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங், “கம்மின்ஸ் அவரது ஆட்டத்திற்காக பாராட்டப்பட வேண்டியவர். அவர் ஒரு கேப்டன் இன்னிங்ஸ் விளையாடினார். பென் ஸ்டோக்ஸ் புதிய பந்துக்கு செல்லாமல் தவறு செய்தார். அதற்காக ரொம்ப தாமதப்படுத்தினார்.

பழைய பந்தை வைத்து கம்மின்ஸ், லயன் ஜோடியை பிரிக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியா எதிர்த்தாக்குதலுடன் சென்று அவர்களது திட்டத்தை முறியடித்தது. அலெக்ஸ் ஹேரி ஆட்டம் இழந்ததும் புதிய பந்தை எடுத்திருக்க வேண்டும். புதிய பந்து எடுக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் இருவரும் செட்டில் ஆகி விட்டார்கள். இப்பொழுது இங்கிலாந்து மீது அழுத்தம் இருக்கும் ஆனால் அவர்கள் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் வலிமையாக திரும்பி வருவார்கள்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை