என் முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!

Updated: Tue, Feb 28 2023 14:07 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான முறையில் நடைபெற்ற 2-வது டெஸ்டை 1 ரன் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்துள்ளது நியூசிலாந்து அணி. ஃபாலோ ஆன் ஆன பிறகு டெஸ்டை வென்ற 4ஆவது அணி என்கிற சாதனையைப் படைத்ததுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிநடை போட்டு வரும் இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி புரட்சி செய்துள்ளது.

சிட்னி 1894, ஹெடிங்லி 1981, கொல்கத்தா 2001, வெலிங்டன் 2023 என நான்கு டெஸ்டுகளில் மட்டுமே ஃபாலோ ஆன அணிகள், மீண்டு வந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளன. அபாரமான வெற்றிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்ட பென் ஸ்டோக்ஸ் - மெக்குல்லம் கூட்டணி 2ஆவது தோல்வியை எதிர்கொண்டுள்ளது. கடந்த 7 டெஸ்டுகளில் இங்கிலாந்து அடைந்த முதல் தோல்வி இதுவாகும். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2ஆவது முறையாக ஓர் அணி, 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. மேலும் இத்தொடரின் ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சனும், தொடர் நாயகனாக ஹாரி புரூக்கும் தேர்வானார்கள்.

தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “நியூசிலாந்தை மீண்டும் பேட் செய்யும் விதமாக ஃபாலோ ஆனை அமல்படுத்திய பிறகு எங்களுக்கான தோல்வியை நாங்கள் தான் உருவாக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது. இதற்கான காரணம் என்னவென்றால், நியூசிலாந்தின் முன்னணி பேட்டர்களைக் கடந்த மூன்று இன்னிங்ஸிலும் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். 

நியூசிலாந்து அணி மிகச்சரியாக விளையாடினால் மட்டுமே எங்களை நெருக்கடிக்கு ஆளாக்க முடியும் என எண்ணினோம். நடப்பதை முன்பே அறிந்து தலைமை தாங்க முடியுமா? கடைசி இன்னிங்ஸில் 250 ரன்களை விரட்ட வேண்டும் என்பதை எண்ணி நாங்கள் அஞ்சியதே இல்லை. நியூசிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்ததுடன் அருமையாகப் பந்துவீசி வெற்றியடைந்துள்ளார்கள். 

இப்போது என்னுடைய முடிவை எண்ணிப் பார்ப்பேனா என்றால் நிச்சயம் இல்லை. அந்த முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன். நியூசிலாந்து அணி எங்களை விடவும் நன்றாக விளையாடியது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை