ஐபிஎல் 2022: ஷுப்மன் கில்லை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!

Updated: Sun, Apr 03 2022 11:53 IST
That over from Lockie changed momentum, says Gujarat captain Hardik Pandya (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்றைய 10ஆவது ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸில், ஓபனர்களாக மேத்யூ வேடும், ஷுப்மன் கில்லும் களம் இறங்கினர். துவக்கத்திலேயே மேத்யூ வேட் ஆட்டமிழக்க, பின் வந்த விஜய் சங்கரும்பெரிதாக ஜொலிக்கவில்லை. பின் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா (31), டேவிட் மில்லர் (20) என வெளியேறினர். ஷுப்மன் கில் மட்டும் அதிரடியாக 46 பந்துகளில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகள் என 84 ரன்களை எடுத்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

அதன்பின் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸில், கேப்டன் ரிஷப் பந்த் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்களை எடுத்தார். இவரை தவிர, அதிகபட்சமாக லலித் யாதவ் (25), ரோவ்மேன் பவல் (20) ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.

போட்டி முடிவுக்கு பின் பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "எங்கள் அணியில் இப்படி அனைவரும் தங்கள் பங்களிப்பையளித்து வெற்றியடைவது மகிழ்ச்சியாக உள்ளது. டெல்லி போன்ற அணியை வீழ்த்த வேண்டும் என்றால், நீங்கள் அவர்களின் விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே முடியும். எங்களிடம் அனைத்து விதமான பவுலர்களும் உள்ளனர். லாக்கி பெர்குசன் சிறப்பாக செயல்பட்டு ரிஷப் பந்த், அக்சர் படேல் போன்றோரின் விக்கெட்டுகளை எடுத்ததால் தான் நாங்கள் வெற்றி பெறமுடிந்தது.

நாங்கள் உண்மையில் 15 முதல் 20 ரன்களை குறைவாக தான் எடுத்திருந்தோம். 180 ரன்களே என்னுடைய இலக்காக இருந்தது. ஆனால் இப்படி ஒரு பந்துவீச்சாளர்களை கொண்டு, நீங்கள் எந்த வித ஸ்கோரையும் டிஃபெண்ட் செய்ய முடியும். ரிஷப் பந்த் இருக்கும் வரை ஆட்டத்தின் போக்கு அவர்கள் பக்கம் தான் இருந்தது. இருந்தாலும் லாக்கி பெர்குசனின் அந்த ஓவர் திருப்புமுனையாக அமைந்தது. இந்த போட்டியில், விஜய் சங்கர், ராகுல் டிவாட்டியா போன்றோரின் பங்களிப்பும் முக்கியமானது.

இப்படி ஒரு ஷூப்மன் கில்லுக்கு தான் நாங்கள் காத்திருந்தோம். அவர் அற்புதமாக விளையாடினார். அவர் வைத்திருந்த நம்பிக்கையும் ஆடிய விதமும் தான் மற்றவர்களுக்கு நம்பிக்கையளித்தது" என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை