தான் விளையாடிய சிறந்த ஆட்டம் இது - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Thu, May 19 2022 11:51 IST
Image Source: Google

நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 66-வது லீக்கில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல், முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து அந்த அணியின் ஓப்பனர்களாக களமிறங்கிய குயிண்டன் டி காக் மற்றும் கே.எல். ராகுல், கொல்கத்தா அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி லக்னோ அணி 210 ரன்கள் எடுத்தது. குயிண்டன் டி காக் 140 ரன்களும், கேப்டன் கே.எல். ராகுல் 68 ரன்களும் எடுத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப்பை இறுதிவரை கொல்கத்தா அணியில் உடைக்க முடியவில்லை.

இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஓப்பனர்கள், லக்னோ அணியின் பந்துவீச்சில் நல்லதொரு துவக்கத்தை அளிக்க தவறினர். இதனால் அந்த அணி பவர் பிளேயில் பேட்டிங்கில் தடுமாறினாலும், அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா (42) மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (50) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட்டாகினர். 

பின்னர் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் (36) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியநிலையில், ஆண்ட்ரூ ரஸ்ஸல் (5) சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, ரிங்கு சிங் (40) மற்றும் சுனில் நரேன் (21) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, லக்னோ அணியை மிரள வைத்தனர். எனினும், அந்த அணி இமாலய இலக்கை கடுமையாக போராடி 2 ரன்களில் தோல்வியடைந்து, இந்த சீசனின் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் தோற்றது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தான் விளையாடிய சிறப்பான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நான் வருத்தமாக உணரவில்லை. ஏனென்றால் நான் நேர்மையாக விளையாடிய சிறந்த விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த விளையாட்டில் எங்களது செயல்திறன், குணாதிசயம் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைக் காட்டிய விதம், மிகச் சிறப்பாகவே இருந்தது

ரிங்கு சிங் எங்கள் அணியை இறுதிவரை அருமையாக விளையாடி அழைத்துச் சென்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரண்டு பந்துகள் எஞ்சியிருந்தபோது அதைச் செய்ய முடியவில்லை. அவர் உண்மையிலேயே மிகவும் சோகமாக இருந்தார். அவர் எங்களுக்காக இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்து வைப்பார் என்று நான் நம்பினேன். 

அப்படி இருந்திருந்தால் அவர் ஹீரோவாக இருந்திருக்க முடியும். இருப்பினும், ரிங்கு சிங் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் அவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை