உலகக்கோப்பை 2023: போட்டி நடக்கும் இடங்களின் விவரம் நாளை வெளியாகும் என தகவல்!

Updated: Sat, May 27 2023 22:58 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் கடந்த 2 மாதங்களாக போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், நாளை குஜராத் அணிக்கும், சென்னை அணிக்குமிடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து, 2021-23 ஐசிசி உலக டெஸ்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் மாதம் 07-11ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, ஐசிசியின் 50 ஓவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் வைத்து நடைபெறவிருக்கிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளனர். 

இந்நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெறவிருக்கும் நிலையில், போட்டி நடக்கும் இடங்கள் குறித்த அறிவிப்பை, நாளை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் போது பிசிசிஐ வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான மைதானங்களை முடிவு செய்யும் குழுவை அமைக்க பிசிசிஐ செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில் இக்குழுவை அமைக்க ஜெய் ஷாவுக்கு வாரியம் அதிகாரம் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை