ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் நாயகன் ஸ்மித்#HBDSteveSmith
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமானவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் உள்ள கோகார்க் எனும் ஊரில் 1989ஆம் ஆண்டு பிறந்தார்.
கிரிக்கெட் உலகில் ஒரு சுழற்பந்து வீச்சாளராக தான் அவர் தனது பயணத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் லெக் ஸ்பின்னராக இருந்த ஸ்மித், 2007, 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கே.எஃப்.சி லீக் போட்டியில், நியூ சவுத் வேல்ஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார்.
அதன்பின் 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம், அவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்தார். அவரது முதல் கிரிக்கெட் தொடர், பாகிஸ்தானுக்கு எதிராக அமைந்தது. ஆரம்ப காலகட்டத்தில், அவரது குருநாதராக முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் இருந்தார்.
பிற்காலத்தில் பந்துவீச்சை கைவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்திய ஸ்டீவ் ஸ்மித், தற்போது உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் 7540 ரன்களையும், 128 ஒருநாள் போட்டிகளில் 4,378 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் ஒராண்டு தடை காலத்தையும் பெற்றார்.
2019ஆம் ஆண்டு தடையிலிருந்து மீண்ட ஸ்மித், அதன்பின் ஆஷஸ் தொடரில் மீண்டும் தனது ருத்ர தாண்டவத்தை வெளிப்படுத்த தொடங்கினார். மேலும் அத்தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அத்தொடரில் அவர் 3 அரைசதம், இரண்டு சதம், ஒரு இரட்டைச் சதமேன மொத்தம் 77 4 ரன்களை குவித்து தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தனது பேட்டிங்கில் பதிலளித்தார்.
அதிலிருந்து இன்று வரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஸ்மித் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இன்று தனது 32ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.