ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டன் குறித்து வெளியான அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக சில அணிகள் பயிற்சிகளையே தொடங்கிவிட்டன. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டன் யார் என்பதையே அறிவிக்கவில்லை.
அந்த அணிக்கு 9 ஆண்டுகளாக கேப்டன்சி செய்தும் ஒரு கோப்பை கூட வென்றுக்கொடுக்காத விராட் கோலி பதவி விலகினார். இதனையடுத்து தினேஷ் கார்த்திக், டூ பிளசிஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் மார்ச் 12ஆம் தேதியன்று அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று தான் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது. அதாவது விராட் கோலி கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவே இல்லை எனத்தெரிகிறது. மீண்டும் அவரையே கேப்டனாக செயல்படுமாறு வற்புறுத்தி வருவதாகவும் ஆர்சிபி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதனை கோலியே உறுதி செய்துள்ளார். இதுகுறித்து புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோலி, உங்களுக்காக சில அப்டேட்களை வழங்கவுள்ளேன். மிகச்சிறந்த ஐபிஎல் சீசனை எதிர்நோக்கியுள்ளேன். புத்துணர்ச்சி பெற்ற் அணியுடன் விளையாட ஆவலோடு இருக்கிறேன்.. அதற்கு காரணம் என்னவென்றால், என கூறுவதற்குள், காணொளி நின்றுவிடுகிறது. மார்ச் 12ஆம் தேதி முழுமையான காணொளி வெளியாகும் எனத்தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மீண்டும் கோலியே கேப்டனாகிறார் என்பது உறுதியாகியுள்ளது.சமீபத்தில் கேப்டன் அறிவிப்புகாக ஆர்சிபி சில உருவக்கட்டவுட்களை வெளியிட்டது. அது விராட் கோலியின் உருவம் தான். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.