சஞ்சு சாம்சனை விட்டு ஸ்ரேயாஸை தேர்வு செய்ய இதுதான் காரணம்!

Updated: Tue, Aug 09 2022 15:38 IST
The reason behind why Dropping Sanju Samson Over Shreyas Iyer (Image Source: Google)

2019ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசியக் கோப்பை நடைபெறவுள்ளதால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தாண்டிற்கான ஆசியக் கோப்பை தொடர் முதலில் இலங்கையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இத்தொடர் இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக ஆசியக் கோப்பையும் பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து ஆசிய அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறக்க முடிவு செய்துள்ளது. இந்திய அணியும் ஆசியக் கோப்பையில் இருந்து டி20 உலகக் கோப்பை வரை அணியை மாற்றாமல் விளையாட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டதால், ஆசியக் கோப்பைக்கான அணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தீபக் சஹாருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயம் காரணமாக பும்ரா விலகியதால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பிய ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஜ்வேந்திர சஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் பேக்கப் வீரராக ஸ்ரேயஸ் ஐயர், தீபக் சஹார், அக்சர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர் இருக்கும்போது, கத்துக்குட்டி பௌலர் பவுன்சர் வீசினாலே திணறும் ஸ்ரேயஸ் ஐயரை சேர்க்க காரணம் என்ன என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஸ்ரேயஸ் ஐயர் பவுன்சருக்கு எதிராக திணறினாலும், ஸ்பின்னர்களை அவரைப் போல வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சிறப்பாக எதிர்கொள்ள முடியாது. அபாரமாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ளக் கூடியவர். அமீரக மைதானங்களில் ஸ்பின்னர்களால்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அவர்களை சமாளிக்க வேண்டும் என்றால் ஸ்ரேயஸ் ஐயர்தான் தேவை. சாம்சன் ஸ்பின்னருக்கு எதிராக படுமோசமாக திணறக் கூடியவர். இதனால்தான், சாம்சனுக்கு பதில் ஸ்ரேயஸ் ஐயர் பேக்கப் வீரராக செயல்படுகிறார்.

இப்படி மைதானத்தின் செயல்பாட்டை வைத்து அணியை தேர்வு செய்திருப்பதால், டி20 உலகக் கோப்பையில் சாம்சனுக்கு அணியில் அல்லது பேக்கப் வீரராக நிச்சயம் இடம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. காரணம், டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவில் பவுன்சர்கள்தான் அதிகம் எடுபடும். சாம்சன் பவுன்ஸ் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்வதில் பேர்போனவர். இதனால், இவர் ஆஸ்திரேலியாவுக்கு பறக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை