ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை வெளியீடு!
இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, மக்கள் கடந்த மாா்ச் மாதம் முதல் தொடா் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி, இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை 50 ஓவர் போட்டியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால்ல் இம்முறை 2022 ஆசியக் கோப்பை தொடர் 20 ஓவர் போட்டியாக நடைபெறவுள்ளது.
இதையடுத்து இத்தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார். அட்டவணையின் படி இந்திய அணி ஆகஸ்ட் 28ஆம் தேதி பாகிஸ்தானுடன், ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆஃப்கானிஸ்தானுடனும், பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்பின் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் சூப்பர் 4 ஆட்டங்களும், செப்டம்பர் 11ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.